வடக்கு மாாகாணத்தில் உள்ள சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் வடக்குமாகாண ஆளுநரின் பணிப்பில் என்ற போர்வையில் பழிவாங்கும் நோக்குடன் வடக்கு மாகாண பிரதம செயலாளரினால் இடமாற்ற சுற்றுநிரூபங்களை மீறி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி சிரேஷ்ட நிலை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளை கவனத்தில் கொள்ளாது பிரதம செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட தான்தோன்றித்தனமான முடிவு சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
கடந்த காலத்தில் சிரேஷ்ட நிலையை கவனத்தில் கொள்ளாது யாழ்ப்பாண வலயப் பணிப்பாளராக நேர்முகத்தெரிவின் அடிப்படையில் நியமனம் வழங்க முற்பட்டு யாழ் மேல்நீதி மன்றில் பாதிக்கப்பட்ட தரப்பு எழுத்தாணை கோரிய வழக்கில் தற்போதைய பிரதம செயலாளர் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்.
இறுதியில் நீதி மன்றத் தீர்ப்பு சிரேஷ்ட நிலையின் படிதான் யாழ்ப்பாண வலயத்துக்கு வலயப் பணிப்பாளர் நியமிக்க வேண்டும் என அமைந்திருந்தது.
இதற்கமைய அப்போது நடந்து முடிந்த நேர்முகப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட தெரிவுகள் இரத்துச் செய்யப்பட்டு சிரேஷ்ட நிலை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார்.
இதே போன்று கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு யூன் மாதமளவில் வழங்கப்பட்ட இடமாற்றங்களில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான தேசிய இடமாற்றக் கொள்கைகள் புறந்தள்ளப்பட்டு மாகாண மட்ட இடமாற்றக் கொள்கையின் அடிப்படையில் நடந்ததாக கூறப்பட்டது.
இலங்கை கல்வி நிர்வாக சேவை நாடளாவிய சேவைகளில் ஒன்று இவ்வாறான சேவைகளுக்கு மாகாண மட்டங்களில் சேவைப் பிரமாணங்களைத் தயாரிப்பதோ, இடமாற்ற கொள்கைகளை தயாரிப்பதோ சட்டபூர்வமான ஒன்றாக அமைய முடியாது.
தேசிய மக்கள் சக்தி அரசில் வடக்கு அரசசேவை உயர் அதிகாரிகள் சிலரின் தான்தோன்றித்தனங்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்திருந்த வேளை அதற்கு மாறாக குறித்த ஊழல்வாதிகள் இந்த அரசிலும் பங்களர்களாகி வீரியம் கொண்டு இயங்க ஆளுநர் நியமனம் ஊடாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய தற்போதைய துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராகவும் வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி யமுனா ராஜசீலன் – வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வருகின்றது.
இதேநேரம் வலிகாமம் வலய (பதில்) வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி லாவண்யா சுகந்தன் வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பா ளர் (கல்வி அபிவிருத்தி) பதவிக்கும் தற்போதைய வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளரான திருமதி அன்னமலர் சுரேந்திரன் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனராம்.
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கல்வி நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளராகவும் இடமாற்றப்பட்டுள்ளாராம்.
இங்கு ஆளுநரின் பெயரினைப் பயன்படுத்தி கடந்த அரசில் பல்வேறு பழிவாங்கல்கள், ஊழல், மோசடிகளுக்குத் துணை போனவர்கள் இந்த அரசிலும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்பதே உண்மை.
எனவே ஆளுமையற்ற அரசியல் தலைமைகளை மக்கள் மீண்டும் மீண்டும் நம்பி ஏமாறுவதை விட எமது மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதுகாக்க மக்கள் வீதியில் இறங்குவதே இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்