Friday, March 14, 2025
Huis Blog

NPP சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி செயற்பாடற்ற 4 தமிழ் உறுப்பினர்கள்..!

0

ஜேவிபி சார்பாக வடக்கு கிழக்குக்கிலிருந்து ஏழு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்

இவர்களில் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் கந்தசாமி பிரபு ஆகிய 4 பேர் பாராளுமன்றத்தில் செயல்படாத (Inactive) தமிழ் உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்கள்

குறிப்பாக Manthri.lk என்கிற ஆய்வு நிறுவனம் செயல்பாடுகள் அடிப்படையில் வழங்கியுள்ள தரவரிசையில் இறுதி இடமான 225 ஆவது இடத்தை இவர்கள் நான்கு பேரும் பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்

இதில் செல்லத்தம்பி திலகநாதன் என்பவர் அரிசி பற்றாக்குறைக்கு நாய்கள் தான் காரணம் என்றும் மனிதர்களை விட நாய்கள் அதிக அரிசியை உண்கின்றன என்றும் பாராளமன்றத்தில் உரையாற்றி இருந்தார்.

அதே போல ஸ்ரீ பவானந்தராஜா, செல்லத்தம்பி திலகநாதன், கந்தசாமி பிரபு ஆகியோர் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர்

இது போதாதென்று இந்த பட்டியலில் உள்ளடங்காத கருணாநந்தன் இளங்குமரன் மற்றும் ஆ.ம ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் ஒரு இரு தடவை எழுத்து கூட்டி வாசித்ததை தவிர எந்த Impact யையும் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, கருணாநந்தன் இளங்குமரன் ஆகியோர் பாதீடு தொடர்பான விவாதங்களையே தவிர்த்து வருகின்றார்கள் என சொல்லப்படுகின்றது

திருகோணமலையிலிருந்து ஜேவிபி சார்பாக தெரிவு செய்யப்பட்ட திரு அருண் ஹேமசந்திரா தவிர்ந்த ஏனைய ஆறு உறுப்பினர்களும் விவசாயம், வளங்கள், வர்த்தகம், நிதி, கல்வி, பொருளாதாரம், சட்டம் வேலைவாய்ப்பு உட்பட எந்த விவாதங்களிலும் எதிர்வரும் காலங்களிலும் கூட பங்களிக்க போவதில்லை

மக்கள் சார்ந்து எந்தவொரு தனிநபர் பிரேரணைகளையோ ,எழுத்து மூல கேள்விகளையோ முன்வைக்க போவதில்லை பிரதமர் உட்பட அமைச்சர்களிடம் கூட எந்தவித துறை சார் கேள்விகளையும் எழுப்ப போவதில்லை குறைந்தபட்சம் பொது தளங்களில் நெருக்கடிகள் உருவாகும் போது மக்கள் சார்பாக கூட இவர்கள் யாரும் நிற்க போவதில்லை

ஜேவிபி தலைமைக்கு ஆதரவாக கண்ணை மூடி கொண்டு வாக்கெடுப்புகளில் கையை தூக்குவதை தவிர எதையும் சாதிக்க போவதில்லை சட்டவாக்க சபையான பாராளமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது அவர்களுடைய Integrity and Honesty, Knowledge and Competent, Empathetic and Attuned to Public Concerns, Visionary and Forward-Thinking, Strong Communication Skills, Experience and Track Record பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, காலத்திற்கு காலம் வெறும் கோமாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், பொது மக்கள் சரியான முறையில் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதில்லை

இதற்கிடையில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் மாகாண சபையையிலும் இவ்வாறான ஜேவிபியின் அதி புத்திசாலிகளை வெல்ல வைக்கும் கருத்துருவாக்கங்களை ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள் வேடங்களில் உள்ள ஒட்டுக்குழுக்கள் மற்றும் அரச துதிபாடிகள் செய்கின்றன.

முப்படைகளிலும் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கத் தீர்மானம் – ஜனாதிபதி

0

முப்படைகளிலும் உள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும், அதே நேரத்தில் அவர்கள் உபகரணங்களுடன் அதிநவீன மயமாக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

“இலங்கை இராணுவம் 100,000 பணியாளர்களாகவும், இலங்கை கடற்படை 40,000 ஆகவும், இலங்கை விமானப்படை 18,000 ஆகவும் மட்டுப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

“படைகளுக்கு நவீன உபகரணங்களைப் பெறுவதே எங்கள் நோக்கம். இலங்கை விமானப் படையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து விமானங்களும் காலாவதியாகி வருகின்றன. எனவே, நாங்கள் புதிய விமானங்களைப் பெறுவோம்.

இலங்கை கடற்படைக்கும் புதிய கைவினைப் பொருட்கள் மற்றும் புதிய உபகரணங்கள் கிடைக்கும். நாங்கள் அதை எந்த தயக்கமும் இல்லாமல் செய்வோம்,” என்று ஜனாதிபதி கூறினார்.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் கைதான சட்டத்தரணி்க்கு நடந்தது என்ன?

0

வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டத்தரணி ஒருவரை குற்றவாளியாக அடையாளம் கண்ட வவுனியா நீதவான் நீதிமன்று அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்ததாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (28.02) வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்ற போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த 2021 ஆம் ஆண்டு விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து செட்டிகுளம் பகுதியில் வைத்து இளம்சட்டத்தரணி ஒருவரிடம் சோதனை நடத்தப்பட்டது.

இதன் போது அவரது உடமையில் கஞ்சா இருந்ததாக தெரிவித்து குறித்த சட்டத்தரணி விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின் செட்டிகுளம் பொலிசாரால் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த சட்டத்தரணி விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு, இது தொடர்பான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் இன்றையதினம் (28.02) அதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை கொண்டு சென்றமை என்பன தொடர்பாக சட்டத்தரணியை குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தது.

இதேன் போது, குறித்த சட்டத்தரணி சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் மேன்முறையீடு தொடர்பான அறிவித்தலை நீதிமன்றில் வழங்கியதன் பிரகாரம் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சட்டத்தரணியும் வவுனியா நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட பொலிஸ் அலுவலரின் தொலைபேசியில் துப்பாக்கியின் படங்கள்..!

0

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கையடக்கத் தொலை பேசியில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் படங்கள் நீக்கப்பட்டிருந்த போதும், பொலிஸ் விசாரணை அதிகாரிகள் அவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக, விசாரணை அதிகாரிகள் மற்றொரு துப்பாக்கியின் புகைப்படங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளின் கைப்பேசியை சோதனை செய்த போது, தற்போது தலைமறைவாகியுள்ள பெண் சந்தேக நபருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்ட தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், மேலும் சோதனையிட்ட போது கைப்பேசியின் கேலரியில் இருந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டிருந்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவைச் சுட துப்பாக்கிதாரி பயன்படுத்திய ரிவொல்வர் துப்பாக்கியின் புகைப்படங்களும், மற்றொரு கைத்துப்பாக்கியின் புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போன சந்தேக நபரான பெண் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு புகைப்படங்களை அனுப்பியது தெரிய வந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபரான பெண் தொடர்பில் மேற்கொள்ள்பட்ட விசாரணைகளின் போது, குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த நீர்கொழும்பு பொலிஸில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள், தொடர்பான தகவல்கள் கிடைத்ததை அடுத்து, கொழும்பு குற்றப்பிரிவின் சிறப்பு பொலிஸ் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 19 ஆம் திகதி, கொழும்பு புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, சட்டத்தரணி வேடமணிந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் சந்தேக நபர் துப்பாக்கியை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து வாழைத்தோட்டம் பொலிஸார் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்து முதற்கட்ட விசாரணைகளைத் ஆரம்பித்த நிலையில், பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட மேலதிக அறிக்கையின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர், மஹரகமவில் உள்ள தம்பஹேன பகுதியைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனராச்சி என்ற முன்னாள் இராணுவக் கமாண்டோ வீரர், 8 மணி நேரத்திற்குப் பிறகு அதே நாளில் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் புத்தளத்தின் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீர்க்கொழும்பு, கட்டுவெல்லேகம வீதியைச் சேர்ந்த பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்ற பெண் இந்த குற்றத்திற்காக துப்பாக்கியை கொண்டு வந்ததாக தெரியவந்தது.

அதேபோல், தற்போது தலைமறைவாகியுள்ள பெண் சந்தேகநபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் முழு மேற்பார்வையின் கீழ் கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவணத்தை பறிகொடுத்த சுடலை ஆண்டிகளாக மாறப் போகும் தமிழ் மக்கள் ..!

0

இடதுசாரிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முதலாவது பாதீட்டை வெற்றிகரமாக சமர்ப்பித்து இருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஊழலுக்கு எதிராக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதலில் ஜனாதிபதி அனுரவுக்கும் பின்னர் தேசிய மக்கள் சக்திக்கும் வாக்களித்தவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் இதுவரை நிகழ்ந்த மாற்றங்களை எடுத்துக் கவனமாக ஆராய்ந்தால் சிறுபான்மையினர் அதிலும் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பது தெளிவாகப் புலனாகிறது.

அனுர அரசின் பாதீட்டை மேலெழுந்தவாரியாக பார்த்தால் வடக்கின் அபிவிருத்திக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தோன்றும். அதேவேளை கடந்த காலத்தில் பேரினவாத அரசாங்கங்கள் செய்த இராணுவ மயமாக்கல் திட்டங்களுக்கு இம்முறையும் எந்த விதத்திலும் சளைக்காமல், வழமை போல் அரச ஊழியரின் சம்பளத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் 48% ஆனது பாதுகாப்புப் படையினரின் சம்பளத்துக்கே ஒதுக்கப்பட்டு உள்ளது.

உலகில் பொது மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது அதிகளவு இராணுவ மற்றும் பாதுகாப்பு படையினரை கொண்ட நாடாக இலங்கை தொடர்ந்தும் இருந்து வருகிறது(ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது ) . ஏற்கனவே தையிட்டி முதலான தமிழரிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் எதையும் விடுவிக்க மாட்டோம் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவிரித்து விட்டது (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது ).

நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற ஆளுநர், ‘பிறந்து வளர்ந்த இடங்களைக் கைவிட்டு மாற்று நிலங்களை பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று மனச்சாட்சியை அடைவு வைத்துவிட்டு ஆலோசனை வழங்குகிறார்.

இதேவேளை பிரதமர் ஹரிணியும் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய அரசியல் வாதிகளும் வழமையான அரசியல்வாதிகள் போல் படம் காட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாணத்தில் பல பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளில் ஒன்றான மலசலகூட வசதிகள் கூட சரியான முறையில் காணப்படவில்லை. இதன் காரணமாகப் பல சந்தர்ப்பங்களில் மாணவர்கள் பாடசாலைகளில் மலசல கூடங்களை உபயோகிக்காது தமது இயற்கைத் தேவைகளை கட்டுப்படுத்துவதால் சிறுநீர் தொற்றுக்கு உள்ளாகின்றனர்.

மறுபுறம் பல பாடசாலைகளில் ஆய்வுகூட வசதிகள் மிகவும் கேவலமான நிலையில் உள்ளது. குறிப்பாகத் தென் பகுதியில் தொழில்நுட்ப பிரிவுகள் உள்ள பாடசாலைகளில் உள்ள ஆய்வு கூடங்களுடன் ஒப்பிட்டால் வட பகுதிப் பாடசாலைகளின் நிலை எவ்வளவு பின்தங்கி உள்ளது என்ற உண்மை புலப்படும்.

உண்மை இவ்வாறு இருக்கப் புலம்பெயர் தமிழர்களின் பெரும் நிதி உதவியுடன் நிறைவான வளங்களுடன் இயங்கும் முன்னணிப் பாடசாலையான யாழ் இந்துக் கல்லூரிக்குத் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழுவுடன் சென்று படம் காட்டும் கல்வி அமைச்சர் உண்மையாக எந்தக் குறைகளை நிவர்த்தி செய்து இருப்பார் ?

அடுத்ததாக யாழ் போதனா வைத்திய சாலைக்குச் சென்று சிறுவர்களுடனும் நோயாளிகளுடனும் உரையாடி அவர்களது குறைகளை அறிவதாகப் படம் காட்டுகிறார். நூற்றுக்கணக்கான இருதய நோயாளிகள் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தை எதிர்நோக்கி வட மாகாணத்தில் காத்திருக்கின்றனர்.

பல சத்திர சிகிச்சை கூடங்கள் யாழ் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும் மாபியாக் கும்பல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஒரு நோயாளி ஆகக் குறைந்தது 2 1/2 வருடங்கள் காத்திருக்க வேண்டும் கூறுகிறது. இதன் காரணமாக உயிர் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நோயாளிகள் தனியார் துறையில் மாபியாக்களுக்கு 20 இலட்சம் அளவில் செலவழித்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள்.

20 இலட்சம் சேர்க்க முடியாத பல ஏழைகள் இந்த 2 1/2 வருட காலத்தில் மாரடைப்பினால் நாள் தோறும் இறந்து கொண்டிருக்கிறார்கள். உயிர்காக்கும் அடிப்படை நுண்ணுயிர் கொல்லி [antibiotics] மருந்துகள் அரச வைத்திய சாலைகளில் இல்லாத நிலை. புற்றுநோயாளர்களுக்கான மருந்துகள் அனேகமானவை அரச வைத்திய சாலைகளில் இல்லை.

வெளிச் சந்தையில் அவற்றின் விலை கோடீஸ்வரர்களாலும் செலுத்த முடியாத அளவு அதிகம். இதனால் பல்லாயிரக் கணக்கான ஏழை நோயாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஏழைகளுக்கு விரைவாகச் சிகிச்சை செய்யப் பிரதமர் உதவி இருந்தால் அவர்கள் கை கூப்பி அம்மையாரைத் தொழுது இருப்பார்கள். ஆனால் இது ஒன்றும் தெரியாத மாதிரி சிறு பிள்ளைகளுடனும் உயிர் ஆபத்தற்ற ஏனைய நோயாளிகளுடனும் உரையாடி அம்மையார் எதை சாதிக்க நினைக்கிறார்?

வட்டுவாகல் பாலத்துக்கும் ஏனைய சாலை அபிவிருத்திப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கியமைக்குத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்துப் பேசும் போது ஏனைய தமிழ் உறுப்பினர்கள் கரகோஷம் செய்கிறார்கள். நெடுஞ்சாலை அபிவிருத்தி என்பது குடியேற்றத் திட்டத்தின் ஒரு உபாயம் என்ற சூழ்ச்சியை அறிய முடியாதவர்களாக இருக்கிறார்கள் தமிழர் பிரதிநிதிகள்.

அபிவிருத்தி என்ற போர்வையில் யாழ் நூலகம் புனர் நிர்மாணிக்கப்பட்டு கடந்தகால வரலாறு பூசிமெழுகப்பட்டு விட்டது. காரணம் நூலகத்தின் ஒரு பகுதியையாவது புதுப்பிக்காமல் வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கும் எண்ணம் எவருக்கும் இருக்கவில்லை. இதுதான் வட்டுவாகல் பாலத்துக்கும் நிகழப்போகிறது.

மேலும், கடந்த கால நெடுஞ்சாலை அபிவிருத்தியின் பின்னர் மறவன்புலவு முதல் வவுனியா வரை தமிழர்களின் பூர்விக நிலங்கள் மாற்றினத்தவர்களுக்கு கை மாறிக்கொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் ‘யாழ்ப்பாணத்தானுக்குக் காணி விற்க மாட்டோம்’ என்று பிரதேசவாதம் பேசிய வன்னி மண்ணின் மைந்தர்களும் கிழக்கில் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய குற்றவாளிகளை ஆதரித்த கிழக்கு மைந்தர்களும் மாற்றினத்தவர்களுக்கு எந்தவித நாணமும் இல்லாமல் காணிகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் மிகவும் திட்டமிட்ட வகையில் வரையப்பட்ட வழிவரைபடத்தினை [Road map] மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் சகல அரசுகளும் முன்னெடுத்து வந்துள்ளன.

இரண்டு அவத்தைகளைக் கொண்ட இத் திட்டத்தின் முதல் அவத்தையானது [phase 1] வடக்குக் கிழக்கு மரபுவழித் தமிழர் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையான நிலத்தொடர்பினை மதுரு ஓயா, யான் ஓயா மற்றும் மல்வத்த ஓயா ஆகிய ஆற்றுப் படுக்கைகளில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தித் துண்டாடுதல் ஆகும்.

இதன் விளைவாக வடமாகாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியன தமது மரபு வழி நிலத்தொடர்பை இழக்கும். இரண்டாவது அவத்தையில் [phase 2] குறிப்பிட்ட சிங்களக் குடியேற்றங்களால் மாற்றமடையும் இனப்பரம்பலைப் பயன்படுத்தி மாகாண எல்லைகளை மீள் நிர்ணயம் செய்தல் ஆகும்.

மகாவலி அமைச்சின் மேலதிகப் பொது முகாமையாளராக 80 களில் கடமையாற்றியவரும் இந்த இரகசிய வழிவரைபடத்தினை முதன் முதலாக ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் காமினி திசாநாயக்க ஆகியோரின் ஆசியுடன் நடைமுறைப் படுத்தியவருமான மாலிங்க ஹேமன் குணரத்தினவின் நூலான ‘ஒரு இறையாண்மை அரசுக்கு’ [for a sovereign state]என்ற நூலில் இந்தத் திட்டம் குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.

இதே வழிவரைபடத்திற்கு அமைவாகப் புதிய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் மாறாது தொடரும் குடித்தொகை மாற்றங்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையையும் மாநில சுயாட்சி கோரிக்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கச் செய்து வருகின்றன.

குறிப்பாக, இடதுசாரிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் இந்த அரசானது முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவான தொகையான 43 பில்லியன் ரூபாக்களையே சமூக நலனோன்பிற்காக [social welfare] செலவிட உத்தேசித்துள்ள அதேவேளை, பாதுகாப்புத் துறைக்காக வழக்கம்போலவே 442 பில்லியன் ரூபாக்களைச் செலவிட உத்தேசித்துள்ளது.

இந்த உண்மையைக் கூட உணர முடியாமல் தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் தமிழ் தேசியவாதிகள் ஒருபுறம். ஏற்கனவே அரசியல் யாப்பு மாற்றத்தை கிடப்பில் போட்டுள்ள தேசிய மக்கள் அரசாங்கம் பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையையும் பேணிவரும் நிலையிலும் இன்னமும் அவர்கள் மூலமாக தமிழர்கள் சம உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று மனப்பால் குடிக்கும் தமிழ் இளைஞர்கள் ஒருபுறம்.

புலிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் வந்து மீண்டும் தமிழர்களின் உரிமையை பெற்றுத் தருவார்கள் என்று இன்னமும் நம்பும் கனவுலகவாசிகள் சிலர். இவர்களது மாயையைப் பயன்படுத்திப் பாராளுமன்றச் சிறப்புரிமைக் கவசத்தினுள் ஒழிந்திருந்து இனத்தின் மானத்தினைக் கப்பலேற்றும் கோமாளிகள் இன்னொருபுறம்.

எனவே, இதுவரை இருந்த அரசுகளைக் காட்டிலும் ஆபத்தான வகையில் தமிழ் மக்களுடன் ‘இறங்கிப் பழகும்’ தந்திரோபாயத்தினைக் கையிலெடுத்துப் பேரினவாத வழிவரைபடத்தினை இற்றைப்படுத்த முற்படும் இந்த அரசு குறித்துத் தமிழர்கள் அனைவரும் விழிப்படைய வேண்டிய கடைசித் தருணம் இது.

இல்லையேல் மாகாண சபைகளையும் பிரதேச சபைகளையும் ஆளும் தரப்பிடம் இழந்து, கட்டியுள்ள கோவணத்தையும் பறிகொடுத்த சுடலையாண்டிகளாக ஈழத் தமிழர்கள் தவிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

Dr முரளி வல்லிபுரநாதன்
21.2.2025

அனுர அரசின் 2025ஆம் ஆண்டின் பாதீட்டில் துண்டுவிழும் தொகை ரூ2,200 பில்லியன்..!

0

நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய, 2025ஆம் ஆண்டில் அரச வருமானம் 4,990 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 7,190 பில்லியன் ரூபாயாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாயாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

9 வருடங்களைக் கடந்தும் தீர்வின்றித் தொடரும் அவலம்; அனுர ஆட்சியில் நீதி கிடைக்குமா?

0

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் எதிர்வரும் 20ம் திகதி போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளதாகவும் அனைவரும் ஒன்றிணைந்து அப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி யோ.கனகரஞ்சினி கிளிநொச்சியில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பில் அழைப்பு விடுத்திருந்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒன்பது ஆண்டுகளாக எங்களுடைய பிள்ளைகளை மீட்பதற்கு பல்வேறு வழிகளிலும் போராடி சர்வதேசத்திற்கு உண்மை நிலைமைகளை எடுத்து கூறி வருகின்றோம்.

தமது பிள்ளைகளை தேடிய 300ற்கு அதிகமாக தாய், தந்தையர் இறந்துள்ளனர்.

உள்ளூரில் எமக்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஜெனீவா கூட்டத் தொடரிலும் பிரச்சனைகளை முன்வைத்து வருகின்றோம். இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதாக சொல்லி கால இழுத்தடிப்பையே செய்கின்றனர்.

பிள்ளைகளை காணாது இறந்த தாய் தந்தையரைப் போல மாரித் தவளை போல் நாங்களும் கத்திவிட்டு இறந்து விடுவோ என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒன்பதாவது கூட்டத் தொடரிலாவது ஜனாதிபதி சர்வதேசத்தின் கோரிக்கையை ஏற்று பெற்றுத்தருவதற்கு முன்வர வேண்டும்.

பல தலைவர்களை இந்த ஒன்பது வருடங்களில் கண்டுள்ளோம். இவர்கள் தெற்குக்கு ஒரு நீதியும் வடக்குக்கு ஒரு நீதியும் வழங்குகின்றனர்.

எனவே எதிர்வரும் 20ம் திகதி கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருடம் நிறைவடைகின்ற நிலையில் நீதி வேண்டி போராட்டம் ஒன்றிணை மேற்கொள்ளவுள்ளோம். எனவே அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு தெரிவித்தார்.

ட்ரம்பின் முடிவினால் காப்பாற்றப்பட்ட ஜனாதிபதி அநுரவின் ஆட்சி..!

0

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பணிகளை இடைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த முடிவானது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நிம்மதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டர்ம்ப நிர்வாகம், வெளிநாடுகள் மீதான பங்களிப்பை குறைத்து அமெரிக்காவின் பொருளாதராத்தையே பிரதான காரணியாக எடுத்துக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த நிலையில், ஒரு நாட்டில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா விரும்பினால், அதனை செயற்படுத்த கூடிய கருவியாக USAID நிறுவனம் இருந்து வந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்திலும் அவரை வெளியேற்றவும், பின்புலத்தில் USAID நிறுவனத்தின் பணம் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதன்படி, USAID இன் பணிகளை இடைநிறுத்த ட்ரம்ப் எடுத்த முடிவானது, அநுர அரசாங்கத்திற்கு பாரிய நிம்மதியையும் அமைதியையும் வழங்கி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

யாழில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு அச்சுறுத்தல்; அரசின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு..!

0

போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது புலனாய்வு பிரிவு மற்றும் அரச தரப்பினால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்றைய தினம் (14) நடைபெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

”தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களால் பல பட்டதாரிகள் போராட்டத்தில் இருந்து ஒதுங்குகின்றனர்.

இருப்பினும், எமக்கான வேலைக்காக தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். தொலைபேசி அழைப்புகள் ஊடாக மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றது.

நாங்கள் அரசுக்கு எதிராக போராடவில்லை, நாங்களும் இந்த அரசாங்கத்தை வரவேற்கிறோம். அரசுக்கு எதிராக செயற்பட வேண்டாம், போராட்டம் செய்ய வேண்டாம் என ஒரு தரப்பினர் தடுக்கின்றனர்” என்றார்.

இது குறித்து அமைச்சர் சந்திரசேகரனிடம் வினவியவேளை,

“புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது. புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்துவது அந்தக்காலத்தில் இருந்தது. அவர்களுக்கு போராடுவதற்கு உரிமை உள்ளது.

போராடுவதற்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுப்பதில்லை. அப்படி அச்சுறுத்தல் விடுப்பார்களாக இருந்தால் அது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இதுவரை நாட்களும் இந்த பட்டதாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்களா? விளையாட்டாக செயல்படுபவர்களிடம் நீங்கள் இது குறித்து கதைக்காதீர்கள். நாங்கள் உங்களது பிரச்சினைகள் குறித்து நிச்சயமாக உள்வாங்கி செயற்படுவோம்” என தெரிவித்தார்.

முழுநேர அரசியல்வாதிகள் ஆசிரியர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா?

0

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 13.02.2025) இடம்பெற்றது என்ற செய்தியை ஆளுநர் செயலகமும் வெளிப்படுத்திள்ளது. இந்த செய்தி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 13.02.2025) இடம்பெற்றது என தெரிவித்திருப்பின் அது தொடர்பாக எவரும் ஆராய முற்பட வேண்டிய தேவை எழுந்திராது.

இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும், பங்குபற்றியதாக உள்ளது.

திரு. பிரதீப் சுந்தரலிங்கம் இப்போது தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரகாவும் உள்ளார். இதே போல திரு. ஜெகதீஸ்வரன் வன்னி பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இதே போல அமைச்சர் ஒருவரின் பிரத்தியேகச் செயலாளராக முழுநேர கடமைபுரியும் ஒருவரும் பங்கு பற்றியுள்ளார்.

ஒரு அரசாங்க உத்தியோகத்தர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் தனது அரச சேவையை இாஜினாமாச் செய்தல்வேண்டும். எனவே ஆளுநருடனான ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தி பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசிரியப்பதவியை இராஜினாமாச் செய்தவர்கள். தற்போது ஆசிரிய சேவையில் இல்லாதவர்கள்.

வடக்கில் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது மருத்துவர் பதவியை இராஜினாமாச் செய்யாது பாராளுமன்று தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக உள்ளாகியுள்ளமையை சவாலுக்குட்படுத்தி அவரை பாராளுமன்ற உறுப்பினர்பதவியிலிருந்து நீக்கவேண்டும் என உயர்நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டள்ளமையும் கவனத்துக்குரியது.

ஆனால் இடமாற்றச் சபையில் சட்டரீதியான சங்கங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பிரதியமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் ஒரு கோரிக்கை முன்வைத்தார் என்ற செய்தியும் காணப்படுகிறது.

தாமே இப்போது ஆசிரியர் பதவியில் இல்லாதநிலையில் அரசியல் கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினராகவும் கல்வி அமைச்சு அல்லாத வேறு ஒரு அமைச்சின் பிரதிஅமைச்சராகவும் இருந்து கொண்டு ஆசிரியர்களை, அசிரியர் சங்கம் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமன்றி இடமாற்றச் சபையில் சட்டரீதியான சங்கங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதுவும் வியப்பாக உள்ளது.

இதேபோல இடமாற்றங்களின் போது அரசியல் தலையீட்டுக்கு அனுமதிக்கவேண்டாம் எனவும் சுயாதீனமாகச் செயற்படுமாறும் அவ்வாறு செயற்படும்போது அந்தச் செயற்பாட்டுக்கு பக்கபலமாக இருப்போம் என பிரதியமைச்சராகவும் அரசியல்வாதியாகவும் இருந்து கொண்டு ஆசிரியர் சங்க பதவியையும் பேணிக்கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுவது எங்ஙனம் என வியப்பாக உள்ளது.

வலயக் கல்வி அலுவலகம், மாகாண கல்வித் திணைக்களம், கல்வி அமைச்சு என்பவற்றில் கொடுக்கப்படும் கடிதங்களுக்கு ஏற்பு கடிதம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், தேவையற்ற நிர்வாக தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டது என்ற விடயமும் காணப்படுகிறது. நல்ல விடயம் தான் ஆனால் இந்த சங்கத்தினருக்கு ஆசிரியர்கள் பதிவுத்தாபலில் அனுப்பிய கடிதங்களுக்கே ஏற்புக்கடிதம் வழங்காதவர்கள் எப்படி அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க முடியும்.

ஏற்கனவே தொழிற்சங்கவாதி ஒருவரால் தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண தளபதியாருக்கு விடப்பட்ட சவாலுக்கு இதுவரை பதிலளிக்கும் திராணியற்ற இவர்களும் இவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஆளுநராலும் எந்தவித விமோசமும் எதிர்பார்க்கமுடியாது என்பதே யதார்த்தம்.

error: Alert !!