வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 13.02.2025) இடம்பெற்றது என்ற செய்தியை ஆளுநர் செயலகமும் வெளிப்படுத்திள்ளது. இந்த செய்தி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 13.02.2025) இடம்பெற்றது என தெரிவித்திருப்பின் அது தொடர்பாக எவரும் ஆராய முற்பட வேண்டிய தேவை எழுந்திராது.
இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும், பங்குபற்றியதாக உள்ளது.
திரு. பிரதீப் சுந்தரலிங்கம் இப்போது தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரகாவும் உள்ளார். இதே போல திரு. ஜெகதீஸ்வரன் வன்னி பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இதே போல அமைச்சர் ஒருவரின் பிரத்தியேகச் செயலாளராக முழுநேர கடமைபுரியும் ஒருவரும் பங்கு பற்றியுள்ளார்.
ஒரு அரசாங்க உத்தியோகத்தர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் தனது அரச சேவையை இாஜினாமாச் செய்தல்வேண்டும். எனவே ஆளுநருடனான ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தி பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசிரியப்பதவியை இராஜினாமாச் செய்தவர்கள். தற்போது ஆசிரிய சேவையில் இல்லாதவர்கள்.
வடக்கில் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது மருத்துவர் பதவியை இராஜினாமாச் செய்யாது பாராளுமன்று தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக உள்ளாகியுள்ளமையை சவாலுக்குட்படுத்தி அவரை பாராளுமன்ற உறுப்பினர்பதவியிலிருந்து நீக்கவேண்டும் என உயர்நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டள்ளமையும் கவனத்துக்குரியது.
ஆனால் இடமாற்றச் சபையில் சட்டரீதியான சங்கங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பிரதியமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் ஒரு கோரிக்கை முன்வைத்தார் என்ற செய்தியும் காணப்படுகிறது.
தாமே இப்போது ஆசிரியர் பதவியில் இல்லாதநிலையில் அரசியல் கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினராகவும் கல்வி அமைச்சு அல்லாத வேறு ஒரு அமைச்சின் பிரதிஅமைச்சராகவும் இருந்து கொண்டு ஆசிரியர்களை, அசிரியர் சங்கம் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமன்றி இடமாற்றச் சபையில் சட்டரீதியான சங்கங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதுவும் வியப்பாக உள்ளது.
இதேபோல இடமாற்றங்களின் போது அரசியல் தலையீட்டுக்கு அனுமதிக்கவேண்டாம் எனவும் சுயாதீனமாகச் செயற்படுமாறும் அவ்வாறு செயற்படும்போது அந்தச் செயற்பாட்டுக்கு பக்கபலமாக இருப்போம் என பிரதியமைச்சராகவும் அரசியல்வாதியாகவும் இருந்து கொண்டு ஆசிரியர் சங்க பதவியையும் பேணிக்கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுவது எங்ஙனம் என வியப்பாக உள்ளது.
வலயக் கல்வி அலுவலகம், மாகாண கல்வித் திணைக்களம், கல்வி அமைச்சு என்பவற்றில் கொடுக்கப்படும் கடிதங்களுக்கு ஏற்பு கடிதம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், தேவையற்ற நிர்வாக தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டது என்ற விடயமும் காணப்படுகிறது. நல்ல விடயம் தான் ஆனால் இந்த சங்கத்தினருக்கு ஆசிரியர்கள் பதிவுத்தாபலில் அனுப்பிய கடிதங்களுக்கே ஏற்புக்கடிதம் வழங்காதவர்கள் எப்படி அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க முடியும்.
ஏற்கனவே தொழிற்சங்கவாதி ஒருவரால் தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண தளபதியாருக்கு விடப்பட்ட சவாலுக்கு இதுவரை பதிலளிக்கும் திராணியற்ற இவர்களும் இவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஆளுநராலும் எந்தவித விமோசமும் எதிர்பார்க்கமுடியாது என்பதே யதார்த்தம்.