சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த முடிவை இன்று சபாநாயகர், நாடாளுமன்றத்தில் முன்வைத்த பின்னரே ரஞ்சித் மத்துமபண்டார இதனை அறிவித்தார்.
எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எனினும், இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் எதிர்க்கட்சி ஒருபோதும் சபாநாயகரை தோற்கடிக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.