Thursday, September 18, 2025
Huis Blog

தமிழர் தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்புவதில் கஜேந்திரகுமார் அணி மும்முரம்..!

0

தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, தமது எஜமானர்களுக்கு சேவகம் செய்வதாக, யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம்(14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நினைவு வாரத்தில் நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் தொடர்பிலும், அவர் உண்ணாவிரதம் இருந்த நாட்களில் அவர் பட்ட வேதனைகளையும் ஆவணப்படுத்தி, ஆவண காட்சி கூடத்தை கடந்த 02 வருடங்களாக நடாத்தி வருகிறோம்.

இந்தமுறை நாம் காட்சி கூடம் நடாத்தும், மாநகர சபைக்கு சொந்தமான காணியை எம்மை காட்சி கூடம் நடாத்த விடாது தடுக்கும் முகமாக சைக்கிள் கட்சியினர் அவ்விடத்தை முன் பதிவு செய்துள்ளனர்.

அதனால் எமக்கான அனுமதி வழங்கப்படவில்லை. எங்களுடைய நிகழ்வுகள் மிக உணர்வு பூர்வமாக அவ்விடத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளையும் மாவீரர் நிகழ்வுகளையும் குறித்த காணியில் நடத்தி வந்தோம்.

இந்தநிலையிலையே அந்த காணியை தற்போது சைக்கிள் கட்சியினர் முன் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அரச தரப்புடன் இணைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை நீர்த்து போக செய்வதற்கு பல வருடங்களாக முயன்று வருகின்றனர்.

அதன் ஒரு அங்கமாகவே தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளை நாங்கள் நடாத்த கூடாது எனவும், அவரது நினைவுகளை சுமந்த ஆவணப்படுத்தல்கள் காட்சி கூடத்தை நடாத்த விட கூடாது என்பதற்காக நாம் வழமையாக செய்யும் யாழ் . மாநகர சபை காணியை அடாத்தாக தாமும் முன் பதிவு செய்துள்ளனர்.

தமக்கு தராமல் விட்டால், யாருக்கும் அந்த காணியை கொடுக்க கூடாது என மாநகர சபைக்கு கூறியுள்ளனர்.

தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பமாகும் நிலையில், இவர்கள் இவ்வாறாக அடாத்தாக செயற்படுகின்றனர். இவர்கள் தற்போது முன்னாள் ஆயுத குழுக்களுடனும் , தேசிய மக்கள் சக்தியுடனும் வெளிப்படையாக இணைந்து, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைத்துள்ளனர்.

ஏனெனில் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிப்பவர்கள் அல்ல தியாக தீபத்தின் வீரச்சாவுக்கு காரணமானவர்கள் உடன் தான் இவர்கள் தற்போது கூட்டு வைத்துள்ளனர். தாயகத்தில் நடைபெறும் நினைவேந்தல்களை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்பும் விதமாகவே கடந்த காலம் தொட்டு செயற்பட்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை மிக உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு முன்னெடுத்து வரும் போது , அதனை குழப்பினர், மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பினர், நல்லூரில் தியாக தீபத்தின் நிகழ்வுகளை குழம்பினார், மாவீரர் துயிலுமில்லங்களில் குழப்பங்களை ஏற்படுத்தினார்.

இவ்வாறாக அவர்கள் தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகளை காலகாலமாக குழப்பி வருகின்றனர். இந்நிலையிலையே , தியாக தீபத்தின் ஆவண காட்சி கூடத்தை குழப்பும் விதமாக அந்த காணியை தாம் முன் பதிவு செய்து, அந்த காணியில் நிகழ்வுகளை நடாத்த விடாது தடுத்துள்ளனர்.

தியாக தீபத்தின் தியாகத்தை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து கூறும் முகமாகவே அக் காட்சி கூடத்தை அமைத்து அவற்றின் ஊடாக நாம் வரலாற்றை கடத்தி வந்தோம். அதனை பொறுக்க முடியாதவர்கள், தமது ஏவலாளிகளாக இவர்களை பயன்படுத்தி அதனை தடுத்துள்ளனர்.

தமது சொத்துக்களையும், தமது சுயலாபத்திற்காகவும், தமிழ் மக்களை பகடை காய்களாக்கும் செயற்பாட்டை கஜேந்திரகுமார் அணியினர் கைவிட வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

பொலித்தீன் பையுடன் வந்து கோடிகளில் புரளும் டக்ளஸ் – பொன்னன் தெரிவிப்பு

0

ஆட்சிக்கு வரும் போது பொலித்தீன் பையுடன் வந்த டக்ளஸ் தேவானாந்தாவிடம் தற்போது கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் பொன்னன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ். ஊடக அமையத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“டக்ளஸ் தேவானாந்தாவிடமுள்ள அனைத்து பணமும் அரசாங்கத்தையும் மற்றும் மக்களையும் ஏமாற்றி பெற்ற பணம் தான்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோடிக் கணக்கான பணம் வெனிநாடுகளில் தான் உள்ளன.

சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள வங்கிகளில் தான் அனைத்து பணமும் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இதற்கு பணத்தை பரிமாற்றும் முக்கிய நபர் கொழும்பில் தற்போது உள்ளதுடன் அவர் ஒரு கோடி செலவில் சைவ உணவகம் ஒன்றையும் நடத்தி வருகின்றார்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கொலை குற்றங்கள், ஊழல் நடவடிக்கைகள், பதுக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம் மற்றும் பலதரப்பட்ட விடங்களை அவர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்ததுடன் எங்கும் தான் வந்து சாட்சியமளிக்க தயார் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை விசாரணை அறிக்கை வவுனியாவில் விநியோகம்..!

0

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் விசாரணை அறிக்கை வவுனியா ஊடகவியலாளர்களால் விநியோகிக்கப்பட்டது.

வவுனியா இலுப்பையடி பகுதியில் வைத்து இன்று (10.09.2025) பொதுமக்கள், வர்த்தகர்கள், சாரதிகள் ஆகியோருக்கு இவ் அறிக்கை விநியோகிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய குறித்த அறிக்கை விநியோகிக்கப்பட்டது

இதில் வவுனியா ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ரெட்ரெஸ் மற்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் இணைந்து வெளியிட்டுள்ள 70 பக்க விரிவான புதிய அறிக்கையில்,

இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

2000 – 2010 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் உள்நாட்டுப் போர் குறித்து செய்தி அறிக்கையிட்டு வந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் சுமார் 44 பேர் கொல்லப்பட்டனர்.

இருப்பினும் இன்று வரை இப்படுகொலைகளுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளியும் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை என அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; வெளியான அதிரடி அறிவிப்பு..!

0

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த முடிவை இன்று சபாநாயகர், நாடாளுமன்றத்தில் முன்வைத்த பின்னரே ரஞ்சித் மத்துமபண்டார இதனை அறிவித்தார்.

எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எனினும், இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் எதிர்க்கட்சி ஒருபோதும் சபாநாயகரை தோற்கடிக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்..!

0

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை மீளவும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நிஷாந்த உலுகேதென்ன இன்று (10) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக சேவையாற்றிய காலத்தில், பொத்துஹெர பகுதியில் நடந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைக்கு அமைய நிஷாந்த உலுகேதென்ன ஜூலை 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர்

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படை புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன், கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம்; நல்லூர் பிரதேச சபை அறிவிப்பு..!

0

நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாக்காலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.

நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் தொற்று நோய்களைக் கருத்திற் கொண்டு நாய்களின் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பெண்நாய்களுக்கான கருத்தடை செயற்றிட்டத்தினை நல்லூர் பிரதேச சபை முன்னெடுக்கின்றது.

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 14 நாம் திகதி வரை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் பெண் நாய்களுக் கான இலவச கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

பெண் நாய்களுக்கான குறித்த இலவச கருத்தடை சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவரும் தங்களால் வளர்க்கப்படும் பெண் நாய்களுக்குரிய கருத்தடை சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுமாறும் பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் வீதிகளில் காணப்படும் கட்டாக்காலி பெண்நாய்களினை சமூகநலன் நோக்கில் பிடித்து நல்லூர் பிரதேச சபையின் கருத்தடை சிகிச்சை முகாமில் ஒப்படைப்பவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 வீதம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

நாளை 10 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 முதல் 1.30 மணிவரை திருநெல்வேலி கம்பன் சனசமூக நிலையம், மாலை 1.30 முதல் 4.15 வரை திருநெல்வேலி பாரதி சனசமூக நிலையம்

நாளை மறுதினம் 11 ஆம் திகதி வியாழன் காலை 8.30 முதல் 1.00 மணி வரை கலைச்சுடர் சனசமூக நிலையம், திருநெல்வேலி மேற்கு மாலை 1.30 முதல் 4.15 வரை கொக்குவில் பழைய உப அலுவலகம், 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 முதல் 1.00 மணி வரை கலைமகள் சனசமூக நிலையம், நல்லூர் வடக்கு மாலை 1.30 முதல் 4.15 வரை பொதுநோக்கு மண்டபம், கல்வியன்காடு, 11ஆம் திகதி சனி காலை 8.30 முதல் 1.00 மணிவரை உதயஒளி சனசமூக நிலையம், அரியாலை கிழக்கிலும் இடம்பெறவுள்ளது.

மீண்டும் மின் கட்டணம் அதிகரிப்பு; வெளியான முக்கிய தகவல்..!

0

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ளது.

இதன்படி, மின்சார கட்டணத்தை 6.8சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை முன் மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், தொடர்பான வாய்வழி மூல பொது ஆலோசனைகள் பெறும் நடவடிக்கையினை எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக முன்வைக்க முடியுமெனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வீதியால் பயணித்த இளைஞரை தாக்கிய வன்முறைக் கும்பல்; வலைவீசும் பொலிஸார்..!

0

யாழ்.தென்மராட்சி வரணிப்பகுதியில் வீதியால் பயணித்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

வரணி மாசேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடிகாமம் பருத்தித்துறை வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வேளை சிட்டிவேரம் அம்மன் ஆலயத்திற்கு முன்பாக நின்ற இனந்தெரியாத இளைஞர் குழு ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய இளைஞர் குழு தப்பிச் சென்றுள்ள நிலையில் கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக தமிழ் இளைஞனுக்கு நடந்த கொடூரம்; நீதி கிடைக்குமா..!

0

கொழும்பு முதல் வெலிமட வரை பயணித்த நபர் ஒருவர் பேருந்தில் உறங்கியதால், தனது இலக்கை தவறவிட்டு, அறியப்படாத ஊர் ஒன்றில் இறங்கிய வேளை அவரை திருடன் எனத் தவறாக எண்ணி, கிராமவாசிகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதல் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அறிந்த குறித்த நபர், மனமுடைந்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டார்.

பாதிக்கப்பட்டவர், புஸ்ஸல்லாவ ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும், இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், ஒரே சகோதரி வேறு பகுதியில் வசித்து வருவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த நபர், ரொத்ஸ்சைல்ட் தோட்டத்துக்குச் செல்லும் வழியில் பேருந்தில் உறங்கி விட்டதால், அதிகாலை 2 மணியளவில் றம்பொட பகுதியில் இறங்கியுள்ளார்.இதனால் வேறு வழியின்றி, றம்பொடவில் வசிக்கும் உறவினர் ஒருவரைத் தேடிச் செல்ல முடிவு செய்த அவர், துரதிர்ஷ்டவசமாக வழி தவறியுள்ளார்.

உதவி கோரி வீடொன்றின் கதவைத் தட்டிய போது, அங்கிருந்தவர்கள் அவரை திருடன் எனத் தவறாக எண்ணி, அக்கம் பக்கத்தினரை எச்சரித்துக் கூச்சலிட்டனர்.

இதையடுத்து, அங்கு திரண்ட கிராமவாசிகள் அவரை கடுமையாகத் தாக்கி, மரமொன்றில் கட்டி வைத்து, கொத்மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைகளில், குறித்த நபர் நிரபராதி எனத் தெரிய வந்ததை அடுத்து, காவல்துறையினர் அவரை பிணையில் விடுவித்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

எனினும், அவரை தாக்கியவர்கள் இந்தச் சம்பவத்தின் காணொளியைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், மனமுடைந்த நபர், தூக்கிட்டு உயிர்மாய்ப்பு செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே..!

0

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் , சட்டத்தரணி மகேஸ்வரி , ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பி யினர், படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது தொடர்பில் சாட்சியங்கள் அளிக்க தயாராகவுள்ளேன் என ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினர் சதா என அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,,

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்தே வேளை, அங்குள்ள மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற வேளை 15 – 20 பேர் அளவில் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை டக்ளஸ் தேவானந்தா பார்க்க வேண்டும் என சொல்லி இராணுவத்தினரிடம் கேட்டு , நாங்கள் நேரில் சென்று அவர்களை பார்த்தோம். அவர்களில் ஒரு 13 வயதுடைய சிறுவனும் இருந்தான். நாங்கள் பார்த்து வந்த சில நிமிடங்களில் வெடி சத்தம் கேட்டது. அத்தனை பேரையும் சுட்டு கொன்று விட்டார்கள்.

அதன் பிறகு நாங்கள் நெடுந்தீவு பிரதேசத்தை கைப்பற்றினோம். அவ்வேளை அங்கிருந்த அரச உத்தியோகஸ்தரான நிக்லஸ் என்பவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தனர். அவர் தான் நேரில் வர மாட்டேன் என கூறியதும் அவரை அடித்து சித்திரவதை செய்த வேளை , அவர் உயிரிழந்து விட்டார். பின்னர் அவரின் உடலை தூக்கில் தொங்க விட்டனர்.

டக்ளஸ் தேவானந்தாவின் மெய் பாதுகாவலராக இருந்தவரை புலிகளுடன் தொடர்பு என கொலை செய்தனர். நெல்லியடியை சேர்ந்த சட்டத்தரணி மகேஸ்வரியை கொலை செய்தனர். தம்முடன் முரண்பட்ட ரமேஷ் என்கிற தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதனை கொலை செய்தனர். அந்த கொலைகளை புலிகள் செய்ததாக கூறினார்கள். ஆனால் புலிகள் அவர்களை கொலை செய்யவில்லை. இவர்களே கொலை செய்தனர்.

இலங்கை ரூபவாஹினி கூட்டு தாபனத்தின் பணியாளர் கே.எஸ் ராஜா என்பவர் இந்தியாவில் இருந்து இலங்கை அழைத்து வந்து தமது ஊடக பணிகளுக்காக வைத்திருந்தனர். அவரும் இவர்களுடன் முரண்பட்ட போது , காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் மதுபானத்தினத்திற்குள் சைனட் கலந்து கொடுத்து அவரை படுகொலை செய்தனர்.

மலையகத்தை சேர்ந்த மோகன் மற்றும் விஜி எனும் இருவரையும் கொலை செய்தனர். அவர்களை மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி அவர்களின் உடல்களை பொசுக்கினார்கள்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கொலை செய்து , கடற்கரையில் அவரின் உடலை போடும் போது அப்பகுதி மக்கள் கண்ணுற்று அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தமையால் உடலை போட வந்தவர்களை அந்நேரம் பொலிஸார் கைது செய்திருந்தனர்

ஈ.பி.டி.பி க்கு சொந்தமான கொழும்பு பார்க் வீதியில் இருந்த வீட்டில் பல கொலைகள் நடைபெற்றன. இந்த படுகொலைகளுக்கு சாட்சியங்களாக நான் இருக்கிறேன்.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் , உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் , துணிந்து சாட்சி சொல்ல நான் தயார் என தெரிவித்தார்.

error: Alert !!