Monday, September 15, 2025
Huisதாயகம்மலையக தமிழ் இளைஞனுக்கு நடந்த கொடூரம்; நீதி கிடைக்குமா..!

மலையக தமிழ் இளைஞனுக்கு நடந்த கொடூரம்; நீதி கிடைக்குமா..!

கொழும்பு முதல் வெலிமட வரை பயணித்த நபர் ஒருவர் பேருந்தில் உறங்கியதால், தனது இலக்கை தவறவிட்டு, அறியப்படாத ஊர் ஒன்றில் இறங்கிய வேளை அவரை திருடன் எனத் தவறாக எண்ணி, கிராமவாசிகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதல் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அறிந்த குறித்த நபர், மனமுடைந்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டார்.

பாதிக்கப்பட்டவர், புஸ்ஸல்லாவ ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும், இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், ஒரே சகோதரி வேறு பகுதியில் வசித்து வருவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த நபர், ரொத்ஸ்சைல்ட் தோட்டத்துக்குச் செல்லும் வழியில் பேருந்தில் உறங்கி விட்டதால், அதிகாலை 2 மணியளவில் றம்பொட பகுதியில் இறங்கியுள்ளார்.இதனால் வேறு வழியின்றி, றம்பொடவில் வசிக்கும் உறவினர் ஒருவரைத் தேடிச் செல்ல முடிவு செய்த அவர், துரதிர்ஷ்டவசமாக வழி தவறியுள்ளார்.

உதவி கோரி வீடொன்றின் கதவைத் தட்டிய போது, அங்கிருந்தவர்கள் அவரை திருடன் எனத் தவறாக எண்ணி, அக்கம் பக்கத்தினரை எச்சரித்துக் கூச்சலிட்டனர்.

இதையடுத்து, அங்கு திரண்ட கிராமவாசிகள் அவரை கடுமையாகத் தாக்கி, மரமொன்றில் கட்டி வைத்து, கொத்மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைகளில், குறித்த நபர் நிரபராதி எனத் தெரிய வந்ததை அடுத்து, காவல்துறையினர் அவரை பிணையில் விடுவித்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

எனினும், அவரை தாக்கியவர்கள் இந்தச் சம்பவத்தின் காணொளியைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், மனமுடைந்த நபர், தூக்கிட்டு உயிர்மாய்ப்பு செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!