Friday, May 9, 2025
Huisதாயகம்காரைநகரில் சட்டவிரோத செயலில் பிடிபட்ட NPP வேட்பாளரை விடுவிப்பதற்கு கடும் முயற்சி..!

காரைநகரில் சட்டவிரோத செயலில் பிடிபட்ட NPP வேட்பாளரை விடுவிப்பதற்கு கடும் முயற்சி..!

சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட NPP கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மணல் ஏற்றிய வாகனம் பொலிஸ் நிலையத்திலேயே உள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, ஜனாதிபதி அநுரகுமாரவின் வருகையையடுத்து வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த வேட்பாளர் தொடர்ச்சியாக தனியார் மற்றும் அரச காணிகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து காணியின் உரிமையாளர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக, அவர் மணல் அகழ்வில் ஈடுபட்டபோது நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது. மணலை உழவு இயந்திர பெட்டியின் அடியில் ஏற்றிவிட்டு மேலே கட்டட இடிபாடுகளை ஏற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஊர்காவற்துறை பொலிஸாரின் கீழ் இயங்கும் காரைநகர் பொலிஸ் காவலரணில் கடமை புரியும் பொலிஸாராலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தொகுதிக்கான தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நேற்றிரவு பொலிஸ் நிலையம் சென்று அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் பொலிஸார் விடுதலை செய்யவில்லை. பின்னர் பிணையில் செல்ல அனுமதித்தனர்.

குறித்த நபர் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் என்ற வகையில், இன்றையதினம் ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு அவரை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான செயற்பாடு மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!