துணுக்காய் வலயத்திற்குட்பட்ட முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலயத்தில் பல வருடங்களாகியும் இடமாற்றம் பெறாமல் கணவன்,மனைவி ஆகிய இருவர் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றமை தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் ஒருவர் 9 வருட காலமாக இடமாற்றம் வழங்கப்படாமல் கடமையாற்றி வருகின்றார். அத்துடன் அவரது கணவரும் தனது இணைப்புக் காலம் நிறைவடைந்து பல நினைவூட்டல்கள் வலயக் கல்விப் பணிப்பாளரால் அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலும், ஆசிரியராகக் கடமை புரிந்து வருகின்றார்.
குறித்த ஆசிரியையின் சகோதரியின் கணவர் துணுக்காய் வலயத்தின் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதும், ஏற்கனவே தற்போதுள்ள வடக்கின் கல்வியமைச்சின் செயலாளருடன் உள்ளூராட்சி அதிகார சபையில் அவர் ஒன்றாக கடமையாற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஆசிரியர்களான கணவன், மனைவி அதிகார பின்னணியில் ஒரு குடும்ப ஆட்சி நடாத்துகின்றனர் என்று மக்களிடத்தே விமர்சனங்கள் முன்வைக்கபட்டு வருகின்றன.