Saturday, August 30, 2025
Huisதாயகம்அதள பாதாளத்தை நோக்கி போரால் அழிவடைந்த வவுனியா வடக்கின் கல்வி..!

அதள பாதாளத்தை நோக்கி போரால் அழிவடைந்த வவுனியா வடக்கின் கல்வி..!

சாதாரண தரப் பெறுபேறுகள் அடிப்படையில் வலய ரீதியாக 100 வலயங்களுள் 96வது இடத்தைப் பெற்று வவுனியா வடக்கு வலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் 100வது இடத்தை நோக்கி நகர்ந்த பின்னர்தான் வடக்கின் கெளரவ ஆளுநர் உள்ளிட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா???

யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி அன்னமலர் சுரேந்திரன், திரு. சிறீஸ்கந்தராசா, திருமதி. அன்ரன் சோமராஜா போன்ற கடமை உணர்வு மிக்க அதிபர், ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றிய அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்ட வடக்கு கல்வி வலயம் இன்று மிகவும் மோசமாக பின்தள்ளப்பட்டமைக்கு வலய அதிகாரி ஒருவரின் பாடசாலைகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அதீத தலையீடும், அழுத்தங்களும், பழிவாங்கல்களுமே காரணம்.

தமக்கான சலுகைகளை முழுமையாகப் பெற்றபடி கதிரைகளை சூடாக்கி வவுனியா வடக்கின் கல்வியை சுடுகாடாக்கும் அதிகாரிகள் எமக்கு தேவையில்லை. அவர்களை உடன் வெளியேற்றி புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டியது கெளரவ ஆளுநர் அவர்களின் தலையாய பொறுப்பாகும். தவறின் இந்த வரலாற்று துரோகத்தை வன்னி மண்ணும் மக்களும் ஒருபோதும் மன்னிக்காது.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பான இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையிலும் அதில் ஒருவர் கெளரவ கல்வி அமைச்சரின் கல்விக் குழு உறுப்பினராக உள்ள நிலையிலும் இதுவரை குறித்த விடயத்தை விசாரணை செய்து பொருத்தமற்ற குறித்த அதிகாரியை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குறித்த அதிகாரி கடமையேற்ற பின்னர்,

1. வவுனியா வடக்கின் கல்வி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. (2021ல் 73%இலிருந்து 2024ல் 63% வரை சாதாரண தரப் பெறுபேறு மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது, மிக அதிகளவான மாணவர்களை பாடசாலைகளில் இருந்து வெளியேற்றி விட்டு உயர்தரத்தில் முன்னணியில் நிற்பதாக ஒரு புரூடா)

2. 2021க்குப் பின்னர் மாணவர் இடைவிலகல் பாரியளவில் அதிகரித்துள்ளது.

3. பல பாடசாலைகளில் உயர்தரம் உட்பட இடைநிலை வகுப்புக்களிற்கு ஆசிரியர்கள் இன்மை தொடர்கின்றது.

4. ஆசிரியர்களுக்கான பொருத்தமற்ற தான்தோன்றித் தனமான இடமாற்றங்கள்.

5. ஆசியர்கள் மீதான பழிவாங்கல்கள் மற்றும் தேவை கருதிய பழிவாங்கல் இடமாற்றங்கள் தொடர்கின்றன.

6. ஆசிரியர்கள் கடும் அழுத்தம் காரணமாக அரச சேவையில் இருந்து அதிகளவில் நிரந்தரமாக விலகிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

7. ஆசிரியர்கள் மன அழுத்தம் காரணமாக உளவியல் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறும் நிலை காணப்படுகின்றது

8. ஆசிரியர்கள் அதிகளவில் மன அழுத்தம் காரணமாக வலயத்திற்கு வெளியே இடமாற்றம் பெற்று வெளியேறிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

9. நிர்வாக சீர்கேடுகளால் அதிபர், ஆசிரியர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

10. இடமாற்றங்களின் போது நியமன நியதிகள், இடமாற்றக் கொள்கைகள் பின்பற்றப்படாது ஆசிரியர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நிலை காணப்படுகிறது.

11. எதிர்த்து கேள்வி கேட்கும் ஊழியர்களுக்கு எதிராக கேவலமாக ஏசுதல், அச்சுறுத்தல்கள், அவதூறு பரப்புதல், வம்பு வழக்குகள் போடுதல் தொடர்கின்றது.

12. இதற்கு எதிராக முறைப்பாடு செய்யும் ஊழியர்களுக்கு எதிராக கடும் பழிவாங்கல்கள் ஊழலுக்கு எதிரான இந்த அனுர ஆட்சியிலும் தொடர்கின்றன.

இவ்வாறான சூழலில் ஐனாதிபதி மற்றும் பிரதமர் உடன் தலையீடு செய்து பொருத்தமற்ற வலய உயர் அதிகாரியை அகற்றி அதிபர், ஆசிரியர்களுக்கான மன அழுத்தமற்ற மகிழ்ச்சியான கற்றல், கற்பித்தல் சூழல் ஏற்படுத்தப்படுமா? அதன் மூலம் மாணவர்களின் இலவசக் கல்வி பாதுகாக்கப்படுமா? என்பதே வவுனியா வடக்கு பிரதேச தமிழ் மக்களின் கேள்வியாகவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!