Wednesday, March 12, 2025
Huisதாயகம்NPP நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பில் ஒருவர் கைது..!

NPP நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பில் ஒருவர் கைது..!

குருநாகல் – பிங்கிரிய பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயசிரி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களுக்கான ​போக்குவரத்து வசதிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக தாம் அங்கு சென்றிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசிரி பஸ்நாயக்க பின்னர் தெரிவித்திருந்தார்.

எனினும், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை தற்போதைக்கு வழங்கும் ஒப்பந்ததாரரை இரத்துச் செய்து விட்டு தமக்கு நெருக்கமானவர்களுக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குமாறு அவர்கள் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு அழுத்தம் பிரயோகித்ததாக தெரிவித்து பிரதேசவாசிகள் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

பிரதேசவாசிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை முற்றுகையிட்டு எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.

அதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த நிலையில், பொலிஸார் தலையிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பாக வெளியில் அனுப்பும் நிலையேற்பட்டிருந்தது.

இதன் போது, இருதரப்பிலும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் தனது அலுவல்களுக்கு இடையூறு மேற்கொண்டதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசிறி பஸ்நாயக்க குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த போராட்டம் தொடர்பில் இன்னும் எட்டுப் பேரைக் கைது செய்யவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!