தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மேக்ஸ்வெல் டி சில்வாவின் பதவியை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்த விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மீது சுமத்தப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்பட்ட விசாரணை முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகத்தை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தவேண்டும் என ஒலிம்பிக் குழுவின் நெறிமுறைக் குழு பரிந்துரைத்திருந்தது.
இது இவ்வாறிருக்க, இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவிகளை இடைநிறுத்துவதாக சர்வதேச ஒலிம்பிக் குழு கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இந் நிலையில், தன்னை செயலாளர் நாயகம் பதவியிலிருந்து இடை நிறுத்தியதை எதிர்த்து நீதிமன்றத்திடம் நியாயம் கோரவுள்ளதாக மேக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.
தன்னைப் பதவியிலிருந்து இடைநிறுத்துவதற்கு சட்டப்பூர்வ அடிப்படை எதுவும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டவுள்ளதாக அவர் கூறினார்.