Wednesday, February 5, 2025
Huisதாயகம்இளைஞர்களிடம் விடுதலை உணர்வை விதைத்தவர் மாவை சேனாதிராசா - உருத்திரகுமார்

இளைஞர்களிடம் விடுதலை உணர்வை விதைத்தவர் மாவை சேனாதிராசா – உருத்திரகுமார்

தமிழர் உரிமைக்காக சிறை சென்ற தமிழ்த் தேசியத்தின் அடையாளம் மாவை சேனாதிராசா. அவர்களின் மறைவு தமிழ் தேசியத்திற்கும், தமிழ் மக்களுக்கும் இழப்பாகும்.மாவை சேனாதிராசா அவர்களின் இழப்பின் துயரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பங்குகொள்வதுடன், இழப்பின் துயரில்வாடும் அவரின் மனைவி, மக்கள், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் , தமிழ் தேசியவாதிகள் அனைவரின் கரங்களையும் இறுகப்பற்றிக் கொள்கின்றது.

காலங்கள் பல கடந்து விட்டாலும், தமிழர் உரிமைக்காக பல போராட்டங்கள் ஆரம்பித்த காலத்தில் உருவாகிய போராளிகள் வரிசையில் மாவை சேனாதிராசாவும் ஒருவராவர், இவர் 1973 காலத்தில் இளைஞர்களின் மனங்களில் விடுதலை உணர்வை ஊட்டியவர் என்ற ஒரே காரணத்திற்காக அன்றைய சிறீமாவோ அரசாங்கத்தினால் பாதுகாப்பு சடடத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சிறைவாசத்தை 5 வருட காலங்களுக்கு மேல் அனுபவித்தார்.

மாவை சேனாதிராசா, காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் ஆகியோர் சிறைவாசம் கழித்து புகையிரதத்தில் யாழ் நகரத்திற்கு வந்தபோது யாழ் நகர மக்கள் உணர்ச்சி பூர்வமான வரவேற்பைக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில் பங்கு கொண்ட நினைவு இன்றும் என் நெஞ்சத்தில் உள்ளது.

மாவை சேனாதிராசா பல தடவைகள் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளை அனுபவித்தார். இச் செய்தியானது அன்றைய காலத்து இளைஞர்கள் மனதில் அகிம்சை மீது இருந்த நம்பிக்கை தளர்ந்து உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதே ஒரே வழி என்ற சிந்தனையை உருவாக்கியது என்றால் மிகையாகாது.

மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், குட்டிமணி, முத்துகுமாரசாமி(குமார்) உட்பட 42பேர் இன விடுதலைக்காய் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள் என்ற செய்தி தமிழர் மனத்தில் கொதி நிலையை உருவாக்கியது.

அன்றைய கால பத்திரிகைகளான தந்தை செல்வாவின் சுதந்திரனும், ஈழநாடும் முக்கிய செய்திகளை பிரசுரித்து சுதந்திர தாகத்தை வளர்த்து வந்தது மட்டுமல்லாது, இலங்கை தீவின் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்த தமிழர் மனதில், சிங்கள பெளத்தருடன் சேர்ந்து வாழவே முடியாது, பிரிந்து செல்வதே ஒரே வழி என்ற பாதைக்கும் வழி சமைத்தது.

இவர்கள் சிறையில் வாடிய காலத்தில் தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்களும் தோன்றி “ஆயுத வழிமூலம் ” எனும் கருத்தியலை உருவாக்கின. இலங்கை குடியரசு நாடாக உருவாக்கப்பட்டமையும் இக்காலத்தில் தான் நடந்தது.

குடியரசு தினம் கரிநாளாக கடைபிடிக்கப்பட்டது. வடகிழக்கு தமிழர் தாயகம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் கிழக்கு தாயகத்தில் மிகவும் காத்திரமாக மாவை சேனாதிராசா பணியாற்றிமை குறிப்பிடத்தக்கது.

மாவை சேனாதிராசாவின் உடன் பிறந்த சகோதரன் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்களில் தமிழீழத் தேசியத் தலைவருடன் இணைந்து செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எம் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயர் சிந்தனையை எம் மத்தியில் விதைத்து, தமிழர் உரிமை மீட்புக்கு அறுபது (60) வருடங்களுக்கு மேலாக தமிழ்தேசிய அரசியல் போராட்டத்தில் அயராது உழைத்தவர் மாவை சேனாதிராசா. அத் தேசியத்தை கட்டிக்காப்பதே நாம் அவருக்கு செய்யும் பெரிதான அஞ்சலியாகும்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!