Wednesday, February 5, 2025
Huisதாயகம்யாழ் பல்கலை மாணவர்களின் பொருத்தமற்ற செயற்பாடு; கலைப் பீடாதிபதி இராஜினாமா?

யாழ் பல்கலை மாணவர்களின் பொருத்தமற்ற செயற்பாடு; கலைப் பீடாதிபதி இராஜினாமா?

யாழ் பல்கலைக் கழகத்தில் ஆளுமை மிக்க ஒருவராகக் காணப்பட்ட கலைப்பீட பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் தனது பீடாதிபதி பதவியை விட்டு விலகுவதாக இன்று எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓரிரு நாட்களுக்கு முன் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலை கலைப்பீட நிர்வாகத்தால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தமக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறிப்பாக கேள்வி கேட்டதற்காக 9 மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் என்பதும் அதில் உள்ளடங்கும்.

இப்போராட்டத்தின் பின்னணி தொடர்பில் ஊடகங்களுக்கு மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் விளக்கங்களை கொடுத்துள்ளனர்.

அதன்படி கடந்த வருடம் மேமாதம் விஞ்ஞான பீடமாணவர்கள் விரிவுரை மண்டபத்தில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது வேண்டுமென்றே விரிவுரையாளர் ஒருவர் மண்டபத்தை வெளியிலிருந்து பூட்டியுள்ளார். பின்னர் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் பூட்டை உடைத்து மாணவர்களை மீட்க வேண்டியேற்பட்டது.

விரிவுரையாளர் மண்டபத்தை பூட்டிய சமயம் தீவிபத்து ஏற்பட்டிருந்தால் எவ்வளவு ஒரு பெரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை விசாரணைக்கு உட்படுத்துவதற்குப் பதில் பூட்டை உடைத்து காப்பாற்றிய மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் பல்கலை மாணவர்கள் ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட 04 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் பல்கலை கழக முன்றலில் நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்நிலையில், யாழ் . பல்கலை கழகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற பேரவை கூட்டத்தில் , மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

பின்னர் , உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் , மாணவர்களின் பிரச்சனை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவை உறுப்பினர்களால் மாணவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து , மாணவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலில் கலைப்பீடாதிபதி ரகுராம் தனது பதவியை விட்டு விலகுவதாக இன்று எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

ரகுராம் கலைப்பீட பீடாதிபதி என்பதற்கு அப்பால் ஊடகத்துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர் என்பதுடன் புலிகளின் ஈழநாதம் மற்றும் யாழ் தினக்குரல் போன்ற பத்திரிகைகளி்ல் ஆசிரியராகவும் கடமையாற்றிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பேராசிரியர்கள் போல் அல்லாது ஆளுமையுடன் துணிச்சலான முடிவுகளை எடுப்பவர் என்பதுடன் பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுப்பவர் எனவும் தெரிய வருகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களின் போதைப் பொருள் பாவனை மற்றும் மாணவர்களின் சமூகப் பிறள்வுகளுக்கு எதிராக கடுமையான நடைமுறையை மேற்கொண்டு வந்தவர் எனவும் பல்கலை வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

இவர் இயக்கப் பாணியில் நடவடிக்கை எடுப்பதில் வல்லவர் எனவும் இவரைப் பற்றி வெளிநபர்கள் தெரிவித்துள்ளார்கள்.

யாழ் பல்கலை மாணவர்கள் சிலர் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த கல் இருக்கைகளில் இருந்து போதைப் பொருள் பாவனை மற்றும் தவறான துஸ்பிரயோக நடவடிக்கைகளை இரவு நேரத்தில் மேற்கொண்டிருந்த போது குறித்த கல் இருக்கைகளை உடைத்தெறிந்து மாணவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விரிவுரை மண்டபத்திலும் மாணவர்கள் சிலர் மாணவிகளுடன் தவறான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த போதே அவர்களை உள்ளே வைத்து பூட்டியதாகவும் இதனாலேயே மாணவர்களுக்கு கோபம் ஏற்பட்டதாகவும் பல்கலை விரிவுரையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: Alert !!