இந்த நாட்டு மக்கள் அநுரகுமாரவின் எதிர்க்கட்சி அரசியலையே பார்த்து பழகியவர்கள். அதிகாரமில்லாத நேரத்தில் அதிகாரத்தோடு இருந்த பல அரசாங்கங்களுக்கு சவாலாக இருந்தவர் அநுரகுமார. ஆனால் அதிகார கதிரைக்கு வந்தபின்னர் அவருடைய செயற்பாடுகள் கருத்துக்கள் அத்தனையும் அவர் மீதிருந்த பாரிய நம்பிக்கையை இல்லாமல் செய்திருக்கிறது என்பது மறுக்கப்படாத உண்மை.
ஊழல் அரசியல்வாதிகளான கள்வர்களை கைதுசெய்வோம் என்ற கோசத்திலேயே அவரது தேர்தல் மேடைகள் அமைந்திருந்தன. ஆனால் ஆட்சிக்கு வந்து அவ்வாறு யாரையும் அவர் கைது செய்யவில்லை. அதற்கு பல உதாரணங்கள் கூறமுடியும்.
மத்திய வங்கி கொள்ளையரான அர்ஜூன் மகேந்திரவை ஆட்சிக்கு வந்து 48 மணித்தியாலத்திற்குள் நாட்டிற்கு பிடித்துக்கொண்டு வருவோம் என்று சொன்னது தொடக்கம் அனைத்து விடயங்களிலும் அவர் சொன்ன எதனையும் செய்யவில்லை என்பதோடு, பல விடயங்களில் சொன்னவற்றுக்கு எதிராகவே செயற்பட்டிருப்பதும் அதற்குச் சான்று.
அநுரகுமார ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நடைபெற்ற கைதுகளில்,
விஜித்த முனி சொய்சா வாகனத்திற்கு பொடி body வைத்ததுக்கு கைது,
கோத்தா காணிக்கு மின்சாரம் எடுத்தற்கு புலனாய்வுக்கு அழைப்பு,
உதயங்க பக்கத்து வீட்டுகாரனுக்கு எஸ்லோன் பட்டயால் அடித்தற்கு கைது,
ஜோன்ஸ்டன் பதிவு செய்யப்படாத வாகனம் பாவித்தார் என்பதற்கு கைது, மற்றும் பல கைதுகள் அவற்றுக்கு காரணமே சொல்லத் தேவையில்லை இருந்தும் கடைசியில் அனைவரும் பிணையில் விடுதலை.
அதனைத் தொடர்ந்து பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் மற்றும் பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ஆகியோரது கொலைகள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அது தொடர்பான ஆவணங்கள் இல்லையென்றும் குழந்தைத்தனமான அறிக்கை வெளியிட்டார்.
அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித வரப் பிரசாதங்களும் கொடுக்கமாட்டோம் என்று சவாலிட்ட அநுரகுமார இன்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வாகனங்கள், அமைச்சர்களுக்கு வழமை போன்ற வரப்பிரசாதங்கள் அத்தனையையும் உயர்த்தி, அமைச்சர்களுக்கு ஏற்கெனவே இருந்த 500L எரிபொருள் கொடுப்பனவை 900L ஆக உயர்த்திக் கொடுத்திருக்கிறார்.
சர்வதேச முதலீடுகளுக்காக அன்றைய அரசாங்கங்கள் செய்த அனைத்தையும் நாங்கள் செய்ய மாட்டோம், நாட்டின் வளங்களை யாருக்கும் விற்கமாட்டோம் என்று கூவித் திரிந்தவர்கள் இன்று அம்பாந்தோட்டையை சீனாவுக்கும், திருகோணமலையை இந்தியாவுக்கும் கொடுப்பதாக பச்சையாக கூச்சமின்றி மக்கள் முன்னால் சொல்கிறார். அப்பாவி மக்கள் ஏதுமறியாது கைதட்டுகிறார்கள்.
பொருளாதாரத்தில் சரிந்துபோய் கிடந்த நாட்டை ரணில் ஓரளவு நிமிர்த்தியபோது பெற்றுக்கொண்ட அநுர, இன்று தன்னுடைய இயலாமையை மறைக்க மற்றைய அரசாங்கங்களையும் ரணிலையும் மாறி மாறி குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறார் தவிர வேறெந்த முன்னேற்றங்களையும் செய்யவில்லை.
முன்னாள் அரசாங்கத்தை குறை சொன்னார்,
முன்னாள் அமைச்சர்களை குறை சொன்னார்,
முன்னாள் ஜனாதிபதியை குறை சொன்னார்,
அரச உத்தியோகத்தர்களை குறை சொன்னார்,
பாதுகாப்பு துறையை குறை சொன்னார்,
சுங்கத் திணைக்களத்தை குறை சொன்னார்,
பொது மக்களை குறை சொன்னார்,
கடைசியில் இன்று வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை குறை சொல்கிறார். எதற்கும் தகுதியில்லாத ஒருவனே அனைத்தையும் குறைசொல்வான் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார்!
நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவுகிறது, அதனை நிவர்த்தி செய்யவில்லை,
வரலாற்றில் இல்லாத அளவு பாரிய ஓர் மழைவீழ்ச்சி பதிவாகி இருக்கிறது, அதன்காரணத்தால் நெல் உற்பத்தி அதிகம் வீழ்ச்சியடைந்து போயிருக்கிறது.
உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது, தேங்காய்க்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக தேங்காயை இறக்குமதி செய்யப் போகிறார்கள்.
அத்தனை அத்தியாவசிப் பண்டங்களினதும் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஆனாலும் வாயால் வெறும் வார்த்தைகளால் நாட்டை உயர்த்த முடியாது என்பதனை புரிந்து கொள்ளாத அநுரகுமார இன்னுமின்னும் பொருத்தமற்ற கருத்துக்களையும் கதைகளையும் பேசிக்கொண்டிருக்கிறாரே தவிர வேறேதும் செய்ததாக அறியவில்லை.
அதாள பாதாளத்தில் இருந்த நாடு ஓரளவு நிமிர்த்தப்பட்டவேளை மீண்டும் ஓர் திறமையற்ற அனுபவமற்ற அரசாங்கத்தினால் அது வீழ்த்தப்படுமாக இருந்தால் இந்த நாட்டை இனி யாராலும் காப்பாற்ற முடியாது.
பிரதி தினுக சம்பத்