இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதும் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்று வருவதாக யாழ். போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை வீட்டில் விழுந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு எடுக்கப்பட்ட CT scan பரிசோதனையில் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை வைத்திய நிபுணர்கள் கண்டறிந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக பணிப்பாளர் தனது சமூக ஊடக பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரு நாட்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழுவினர் யாழிற்குச் சென்று மாவை சேனாதிராசாவுடன் சமகால அரசியல் மற்றும் கட்சியில் இருந்து பலர் நீக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.