திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல் இன்று வெள்ளிக் கிழமை அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது.
டிசம்பர் 31 ஆம் திகதி முதல் பகல்பத்து உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளித்தார்.
பகல்பத்து முடிந்து, வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பானது இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
திருப்பள்ளியெழுச்சிக்குப் பிறகு நம்பெருமாள், ரத்தின அங்கியுடன் பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து கருவறையிலிருந்து அதிகாலை 4.15 மணிக்கு தனுர் லக்னத்தில் சிம்ம கதியில் புறப்பட்டார்.
தொடர்ந்து, வலதுபுற மதில்படி வழியாக இரண்டாம் பிரகாரம் எனப்படும் ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக, பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாயிலைக் கடந்தார் நம்பெருமாள்.
இதையடுத்து, மூன்றாம் பிரகாரத்திலுள்ள தங்கக்கொடிமரம் வழியாக துரைப்பிரதட்சணம் செய்து, குலசேகரன் திருச்சுற்று வழியாக, விரஜாநதி மண்டபத்தை வந்தடைந்தார்.
அங்கு நம்பெருமாளுக்கு வேத விற்பன்னர்கள் வேதங்களை வாசித்தனர். இதைத் தொடர்ந்து, பரமபதவாசலை வந்தடைந்த நம்பெருமாள், ஸ்தானீகர் கட்டியம் கூற சரியாக அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.
அதேபோல், சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டதுடன் தமிழகத்தின் பிற வைணவத் தலங்களிலும் பரமபத வாசல் அதிகாலை திறக்கப்பட்டது.